சென்னை: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் செய்வதில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது. இணையவழியில் நெல் கொள்முதலை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டதால் நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துளளது.
நாடு முழுவதும நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவா்கள் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இணைய வழி பதிவு முறையை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, தமிழகத்தில் உழவா்கள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை எளிய முறையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், கொள்முதல் செய்ய வேண்டிய நாளினைத் தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்து பயன்பெறும்படியும் கேட்டுக் கொண்டது.
தற்போதைய நிலையில், நெல்கொள் முதல் செய்ய கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று ஆன்லைன் பதிவு செய்து பிறகு, மீண்டும் கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெற்று நெல் கொள்முதல் நிலையத்தில் அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றால்தான் நெல்லை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் வெளிச் சந்தை வியாபாரிகளிடமும் இடைத் தரகர்களிடமும் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்யும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் குத்தகை சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஆன்லைன் பதிவை ரத்து செய்யும்படி விவசாயிகள் கோரி வந்தனர்.
இந்த நிலையில், அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் அளித்தால், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.