சென்னை: செப்டம்பர் 1ந்தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,   சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 என்ற வீதத்தில் கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், காரீப் பருவம் 2002-2003 முதல் மத்திய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்படுகிறது. மேலும், மத்திய அரசின் தர நிர்ணயத்துக்கு உட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்தில் தேவை யான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்துக்கும் முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாலும், விவசாயிகள் நலன் கருதி காரீப் 2022-23 பருவத்துக்கான நெல் கொள்முதலை செப்.1-ம் தேதி (நாளை) முதல் மேற்கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, தமிழகத்தில் காரீப் 2022-23 பருவத்துக்கான நெல் கொள்முதலை செப்.1-ம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மத்திய அரசு காரீப் 2022-23 பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,040 என்றும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,060 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர் துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கிலும், கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டிலும், சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.75-ம், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்படி, தற்போது சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையை நாளை (செப்.1) முதல் வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.