திருநெல்வேலி
திருநெல்வேலி அருகே ஓடும் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்
திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மும்பைக்கு இயக்கப்படும்m எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி சந்திப்புக்கு வந்தது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து ரெயில் நிலையம் அருகில் சென்றபோது ஏ-1 ஏ.சி. பெட்டியின் அடியில் இருந்து திடீரென்று புகை வெளியேறியதால் உடனடியாக அந்த ரெயில் தாழையூத்து ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டியின் அடியில் இருந்து புகை வெளியேறியதைப் பார்த்த பயணிகள் பீதி அடைந்த அவசரமாக கீழே இறங்கினர்.
இந்த ரெயிலின் கார்டு சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்து அந்த பெட்டியில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து புகை வெளியேறிய பகுதியில் ரசாயனத்தை பீய்ச்சி அடித்தார். சிறிது நேரத்தில் புகை கட்டுக்குள் வந்தது.
இந்த புகை ஏற்கனவே பிரேக் பிடித்தபோது சக்கரத்துடன் இணைந்த பிரேக் ரப்பர் பகுதி மீண்டும் விலகாமல் இணைந்திருந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப பணியாளர்கள் கோளாறை சரி செய்து மீண்டும் ரெயிலை இயக்கினார்கள். 30 நிமிடங்கள் தாமதத்துக்கு பிறகு ரெயில் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.