சென்னை: திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மானேஜர் பி.டி.செல்வகுமாருக்கு தி.மு.க-வில்  முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது.  அதுபோல  ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ,  சுப்புரத்தினத்திற்கும்  முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், மாற்று கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் அடைக்கலம் தேடியவர்களை திமுக தலைமை பதவி வழக்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, தி.மு.கவில் இணைந்த  தவெக நிர்வாகிகளான பி.டி. செல்வகுமார் மற்றும் சுப்புரத்தினம் உள்ளிட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய கட்சிப் பொறுப்புகளை வழங்கி தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்த பி.டி. செல்வகுமாருக்கு, தற்போது தி.மு.க வர்த்தகர் அணியின் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வந்த இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு இருக்கும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, தி.மு.க தலைமை இந்தப் பொறுப்பை அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து தி.மு.கவில் இணைந்த சுப்புரத்தினத்திற்கு, அக்கட்சியின் செய்தித் தொடர்பு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் அணியில் இருந்தபோது செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், பல அரசியல் விவாதங்களில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்தனர். இதில் மனோஜ் பாண்டியனுக்கு வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவுக்கு ஒரத்தநாடு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியிலிருந்து வந்த மருது அழகுராஜ் மாநில செய்தித் தொடர்புக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது சுப்புரத்தினத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]