சென்னை: மாநில தகவல் ஆணையர்களாக  P தனசேகரன், எம் ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாநில கவர்னர் சார்பில், மாநில முதன்மைச் செயலாளர் ஸ்வர்னா வெளியிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது தகவல் ஆணையம் ஆகும். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பிரியாவின் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்தது.

அதையடுத்து புதிய தகவல் ஆணையர் நியமிப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.  தலைமை தகவல் ஆணையரை பரிந்துரை செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் புறககணித்த நிலையில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமைச்செயலாளர் கே.சண்முகம், நிர்வாக சீர்த்திருந்த துறை அமைச்சர் ஜெயக்குமாரும் பங்கேற்று புரிய தகவல் ஆணையர் குறித்து முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ். கடந்தஆண்டு இறுதியில் நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால்,  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைமை தகவல் ஆணையராக செயல்படுவார்அல்லது, 65 வயதாகும் வரை இப்பொறுப்பை வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 2 தகவல் ஆணையர்களை கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார். அதன்படி,  பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்படுவதாக, அரசின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்னா தெரிவித்துள்ளார். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.