டில்லி

நேற்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் உரையில் உள்ள 3 அறிவிப்புக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 73 ஆம் சுதந்திர தினம் நேற்று நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.    டில்லி செங்கோக்கையில் நேர்று பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.   மோடி தனது உரையில் , “பல்வேறு சிரமங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம் வழி வகுக்கிறது.  இது வருங்கால தலைமுறைகளுக்குப் பல புதிய சவால்களை உருவாக்குகிறது.

மக்கள் தொகை பெருக்கமே குடிநீர் பற்றாக்குறை, வன அழிப்பு, நிலச்சீர்கேடுகள், வீடுகள் இன்மை, ஏழ்மை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றுக்குக் காரணம் ஆகும்.  மத்திய மற்றும் மாநில மாநில அரசுகள் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த திட்டங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களைச் சிறிய அளவில் வடிவமைத்துக் கொள்வது தேச பக்தி சார்ந்த செயல்

வரும் காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படவுள்ளது   எனவே. பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும்.   மேலும் ரசாயன பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

மத்திய அரசு செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது.   உண்மையில் செல்வத்தை உருவாக்குபவர்கள் மதிக்கப்பட வேண்டும்.  இவ்வாறு செல்வம் உருவாக்கப்பட்டால் தான் அதனை அனைவருக்கும் விநியோகிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் இந்த மூன்று அம்சங்களையும் வரவேற்றுள்ளார்.   ப சிதம்பரம், “சிறு குடும்பம் அமைத்தல், செல்வங்கள் உருவாக்குபவர்களை  மதித்தல், பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை மனதார வரவேற்கிறேன்.

குறிப்பாக நிதியமைச்சரும், அவருடைய துறை சார்ந்த வருமான வரி அதிகாரிகளும். பிரதமரின் துறையின் கீழ் உள்ள விசாரணை அதிகாரிகளும் இரண்டாவது அறிவுரையான செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல் என்பதைத் தெளிவாகவும் சத்தமாகவும் கேட்பார்கள் என்று நம்புகிறேன்

பிரதமரின் அறிவுரைகளில் முதல் அறிவுரையான மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் மற்றும் மூன்றாவது அறிவுரையான  பிளாஸ்டிக் தடை ஆகியவற்றை  மக்கள் இயக்கங்களாக மாற்ற வேண்டும்.   இந்த இரு விஷயங்களையும் உள்ளூர் அளவில் ஏராளமான தன்னார்வ தொண்டு இயக்கங்கள் முன்னின்று மேற்கொள்ளத் தயாராக  உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.