டில்லி

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் வேலை வாய்ப்பை உருவாக்காத மத்திய அரசை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி உள்ளார்.

சமீபத்தில் பிரதமர்  மோடி பகோடா விற்பவர் பணம் ஈட்டுவதால் அதுவும் ஒரு வேலை வாய்ப்பு எனக் கருத வேண்டும் என கருத்து தெரிவித்தார்.  அதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   பெங்களூருவில் சில இளைஞர்கள் பாஜக அலுவலகம் முன்பு பகோடா விற்பனை செய்யும் கடையை அமைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பிரதமரின் இந்தக் கருத்தையும்,  மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்க வில்லை எனவும் கூறி முன்னாள் நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர் கருத்துக்களைப் பதிந்துள்ளார்.

அந்தப் பதிவுகள் பின் வருமாறு :

1.       அரசு தாறுமாறாக வேலைவாய்ப்பை உருவாக்கி உங்களைத் தாக்க உள்ளதால் கவனமாக இருங்கள்.

2.       கடந்த 2017-18 ஆம் வருடம் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் அறிவிப்பு இரு மேதைகளால் பாழாக்கப்பட்டுள்ளது.   இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எனது கருத்தை படிக்கவும்

3.       முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ரூ.43000 கடன் உதவியால் ஒரு வேலை வாய்ப்பு உருவாக்க முடியும் என சொல்லப்பட்டது.   ரூ.43000 முதலீட்டில் ஒரு “புதிய” வேலை வாய்ப்பை உருவாக்கியவர் யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள்.

4.       பிரதமர் பகோடா விற்பனை செய்வதும் ஒரு வேலை வாய்ப்பு எனக் கூறி உள்ளார்.  அப்படியானால் பிச்சை எடுப்பதும் வேலை வாய்ப்புதான்.   ஆதரவற்ற ஏழைகளையும்,  ஊனமுற்றோரையும் பிச்சை எடுப்பதால் இனி பணியில் உள்ளவர்கள் என நாம் அழைக்கலாம்

5.       100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்களும் வேலையில் உள்ளதாக ஒரு அமைச்சர் கூறி உள்ளார்.   எனவே அவர்களை 100 நாட்கள் பணி புரிபவர்கள் எனவும் 265 நாட்களுக்கு பணி அற்றோர் எனவும் இனி அழைப்போம்

6.       உண்மையான வேலை வாய்ப்பு உருவாக்குவது தனியார் முதலீடு,  தனியார் பங்களிப்பு,  ஏற்றுமதி உயர்வு ஆகியவைகளால் மட்டுமே சாத்தியமாகும்.   ஆனால் அது இது வரை நடைபெறவில்லை.

இவ்வாறு ப.  சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.