சென்னை:

”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது”  மோடி அரசு குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று தபால்துறை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என மத்தியஅரசு அறிவித்தது.  தபால்துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ’ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது’ என காட்டமாக விமர்சித்தார்.

‘திருவண்ணாமலையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மோடி தலைமையிலான பாஜகவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு பாரதியஜனதா கட்சிதான் காரணம் என்றும்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை  கவிழ்க்க பாஜக திட்டமிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர்,  இந்தியாவில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ஜனநாயகத்தை கொலை செய்யும் ஆட்சியா ? எனவும் கேள்வி எழுப்பிய சிதம்பரம், தபால் துறை தேர்வில் மாநில மொழியான தமிழ் மொழி நீக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

மத்திய அரசு இந்தியை திணிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு  புதுமுயற்சி எடுத்து வருவதாக கூறியவர், பாஜக-வின் ஆட்சி என்பது, ஓடாத படத்தை 100 நாள் ஓட்டி வைப்பது போல ஓடிக்கொண்டிருக்கிறது எனவும், இதுவரை ஒன்றும் செய்யாத நிலையிலேயே  அரசு 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

ப.சிதம்பரத்தின் கடுமையான விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.