டில்லி

ரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார வல்லுனர்கள் முட்டாள்களா என ப சிதம்பரம் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

நேற்று குஜராத் தேர்தலை முன்னிட்டு மோர்பி பகுதியில் நடந்த ஒரு பேரணியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.  அவர் தனது உரையில், “ஒரு சில அறிவு ஜீவிகளும், பொருளாதார மேதைகளும் தேவை இல்லாமல் நாட்டு மக்களை திசை திருப்புகின்றனர்.  ஒரே வரியாக ஜி எஸ் டி 18% விதிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கூறுவது இவர்களின் தவறன வழி காட்டுதலினால் தான்.  அவர்கள் ரூ.5 கோடி மதிப்புள்ள வாகனங்களுக்கும், சாதாரண உப்புக்கும் ஒரே வரி விதிக்கச் சொல்கிறார்கள். சிகரெட்டுக்கும் மதுவுக்கும் வரியைக் குறைத்து புற்று நோயைப் பரப்பும் சொல்வது மிகப்பெரிய முட்டாள்தனமான யோசனை” எனக் கூறினார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.  அதில் அவர், “ஜி எஸ் டி அனைத்துப் பண்டங்களுக்கும் 18% என்பது மிகப் பெரிய முட்டாள்தனமான யோசனை என்றால் அரவிந்த் சுப்ரமணியன் போன்ற பொருளாதார வல்லுனர்கள் முட்டாள்கள்.  அப்படித்தான் பிரதமர் சொல்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.  மேலும் அவர் 2015 ஆம் வருட ஜி எஸ் டி கமிட்டியின் அறிக்கையில் அரசின் வருமான அடிப்படையில் 17-18% ஜி எஸ் டி அமைக்கலாம் என குறிப்பிட்டதற்கு மோடி என்ன பதில் சொல்கிறார் எனக் கேட்டுள்ளார்.  சாதாரண பொருட்களுக்கு 15% ஜி எஸ் டி எனவும் ஆடம்பரப் பொருட்களுக்கு 18% ஜி எஸ் டி எனவும் மாற்றி அமைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.