திருச்சி: திருச்சியில் மூன்று இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை உருவாக்க வேண்டும் எனதிருச்சி தொகுதி காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி. தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மறைந்த  ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகேயுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கொரோனா காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தது நல்ல விஷயம். அவர் மூலம் பல நல்ல வளர்ச்சிப் பணிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக அவர் இருக்கிறார். சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

குடும்பத்திற்கு 4,000 ரூபாய் அறிவித்து, முதல் கட்டமாக 2,000 ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனாவால் தினசரி பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. கொரோனாவை ஒழிப்பதற்கும், பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறார்.

கொரோனா பாதிப்பு மேலும் உயரக்கூடும் என்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியார் மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் உள்ளது. வெண்டிலேட்டர் வசதி இல்லை. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திருச்சியில் ஆச்சிஜன் பிளாட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதன்படி திருச்சி  பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்க வேண்டும் என்றும், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பிளான்டை புதுப்பித்தால், மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கலாம். இந்த 3 இடங்களிலும் ஆக்சிஜன் தயாரித்தால், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீங்கும். இதுகுறித்து,  ஸ்டாலின் வசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவானாலும் பரவாயில்லை எதிர்காலத்தில் கொரோனா தொற்று 3ஆவது அலை வந்தாலும் இது உதவியாக இருக்கும். ஆகையால் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் திருச்சியில் மூன்று ஆக்ஸிஜன் பிளான்ட்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய அரசு, மத்திய சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் போதிய உபகரணங்கள், மருந்துகள் உதவிகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.