புதுடெல்லி: ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யும் வாகனங்களுக்கான அனுமதி பெறுதலுக்கு, அடுத்த 2021ம் ஆண்டு மார்ச் 31வரை நீட்டிப்பு அளித்துள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் முக்கியமானவை என்பதால், இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைகளை மேற்கொள்ளும் சில வாகன நிறுவன உரிமையாளர்களிடமிருந்து, அனுமதி தொடர்பான பிரச்சினை, அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த 1988ம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 66ன் கீழ் பெற வேண்டிய வாகன இயக்கத்திற்கான அனுமதி காலக்கெடுவை, அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் முதல் பக்கத்தில், ‘சாலைப் போக்குவரத்தின் சர்வதேச மாநாடு’ என்று முத்திரையிடுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.