சென்னை,
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று மாலைக்குள் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிட்டிசிவில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
இதற்கிடையில், ஆஜராக 4 வார கால அவகாசம் கேட்டு சசிகலா கேட்ட கோரிக்கையும் இன்று உச்ச நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறைச்சாலைக்கு செல்வது உறுதியானது.
அதைத்தொடர்ந்து பெங்களூர் சிறைச்சாலைக்கு செல்வதற்கு, இன்று முற்பகல் 11.30 மணி அளவில் ஜெ.வின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து கிளம்பிய சசிகலா நேராக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து வணங்கி, மூன்று முறை கையால் ஜெ.வின் கல்லறையில் அடித்து, ஏதோ முனுமுனுத்தவாறு சத்தியம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி எம்.ஜி.ஆரின் வீடு அமைந்துள்ள ராமாவரம் தோட்டம் வந்தடைந்தார். அங்குள்ள எம்ஜிஆரின் சிலையை தொட்டு வணங்கிய சசிகலா,வீட்டினுள் சென்று சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.
அவரது செயல் அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது. காரணம், இதுவரை எந்த காரணத்துக்காகவும் ராமாவரம் தோட்டம் வராத சசிகலா இன்று வந்திருப்பது நகைப்புக்குரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
ஏற்கனவே ஓபிஎஸ் ஜெ. சமாதியில் தியானம் செய்துவிட்டுத்தான் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். ஆனால், சசிகலாவோ ஜெ. சமாதியில் சபதம் செய்துவிட்டு, எம்ஜிஆர் வீட்டில் தியானம் செய்தது, பொதுமக்களிடம் தன்மீது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதையே காட்டுவதாக கூறப்படுகிறது.