உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளது.
இந்த தேர்தலில் சுஹல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஒவைசி திட்டமிட்டுள்ளார்.
அண்மையில் வாரனாசி சென்ற ஒவைசி, கூட்டணி குறித்து , சுஹல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த உன்னோவ் தொகுதி எம்.பி.யான சாக்ஷி மகராஜ், உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் என்ற இடத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் “பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒவைசி பெரிதும் உதவி செய்தார். அதுபோல் மே.வங்காளம் மற்றும் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. ஜெயிக்க ஒவைசி துணையாக இருப்பார்” என குறிப்பிட்டார்.
பீகார் மாநிலத்தில் ஒவைசி கட்சி, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறி ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி