லண்டன் :
99 வயதான ராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை 100 முறை சுற்றி வந்து தேசிய மருத்துவ சேவைக்கு 17 மில்லியன் பவுண்ட் நிதி திரட்டி இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
100 வயதை எட்டிப்பிடிக்கயிருக்கும் கேப்டன் டாம் மூர் தேசிய மருத்துவ சேவை அறக்கட்டளைக்கு (என்ஹெச்எஸ்) 1000 பவுண்ட் நிதி திரட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தார்.
ஆனால் கிட்டத்தட்ட 800,000 பேர் அவரது நிதி திரட்டும் முயற்சிக்கு நன்கொடைகளை வழங்கி அவரது சேவையில் இணைந்துகொண்டனர்.
கேப்டன் டாம் மூர் இரண்டாம் உலக போரின் போது இந்தியா மற்றும் பர்மாவில் பணிபுரிந்திருக்கிறார், இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி 100 வயது ஆகப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது வீட்டில் 25 மீட்டர் சுற்றளவு கொண்ட தோட்டத்தை 100 முறை சுற்றி வந்து, அதாவது 2.5 கி.மீ. தூரம், அனைவரையும் ஆச்சர்யமூட்டினார்.
அவரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்ததோடு, நிதியையும் வழங்கினர். இது தற்போது பிரிட்டனில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.