டில்லி:

டந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.50 அளவிலான கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் தெரிவித்து உள்ளார்.

பணமதிப்பிழப்புக்கு பிறகு   ரூ.50 கோடி அளவிலான கள்ள நோட்டு  கடந்த 3 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டு உள்ளதாக மாநிலங்களுக்கான மத்திய உள்துறை  அமைச்சர் கிஷன் ரெட்டி பாராளுமன்றத்தின் மக்களவையில் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த ஆண்டு ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

கள்ள நோட்டு  தொடர்பாக மேற்குவங்கத்தில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அடுத்து குஜராத்தில் 42 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 34 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், தேசிய குற்ற பதிவு அலுவலகம் (NCRB), தெரிவித்துள்ள தகவல்படி, ஜூன் 18ந்தேதி வரை 20,068 ரூ. 2000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து  மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது. அதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு திடீரென பணமதிப்பிழப்பு (டிமானிட்டைஷேசன்) அறிவிக்கப்பட்டது.. இதனால் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார். இதனால் மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளானார்கள். அதைத்தொடர்ந்து புதிய ரூ.2000, ரூ.500  நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. இந்த நோட்டுக்கள் நவீன தொழில்நுட்பத்துடன் அச்சடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுபோல கள்ளநோட்டுக்கள் அச்சடிக்க முடியாது என்றும் மத்தியஅரசு கூறியது.

பண மதிப்பிழப்பு குறித்து கூறிய பிரதமர், கறுப்பு பணத்தை ஒழிக்கவே பண மதிப்பிழப்பு கொண்டு வந்ததாக தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் கள்ளநோட்டு அச்சடித்து வெளியிடுவதை தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

ஆனால், புதிய நோட்டுக்களை போலவே ஏராளமான கள்ள நோட்டுக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தேசிய குற்ற பதிவு அலுவலகம் (NCRB), வருடாந்திர அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் முதன்முறையாக பண மதிப்பிழப்புக்கு பிறகு கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை தெரிவித்து உள்ளது.

பண மதிப்பிழப்புக்கு  பிறகு கள்ள நோட்டுக்கள்  தொடர்பாக  53,254 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களில்  357 பேர் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

அத்துடன்  13,513  ரூ. 500 கள்ள நோட்டுக்களும், 10,682 ரூ.100நோட்டுக்களும், 2,233 ரூ.200 கள்ள நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மேலும், கடந்த 2017ம் ஆண்டு 28.10 கோடி அளவிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப் பட்டு இருப்பதாகவும், 2018ம் ஆண்டு 17.75 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1046 பேர் கைது செய்யப்பட்டனர், 2018ம் ஆண்டு 884 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 969 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும்தெரிவித்து உள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரை (ஜூன் 18ந்தேதி வரை)  2000 ரூபாய் கள்ள நோட்டு 20,068 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

அதே வேளையில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டில் ரூ.15.48 கோடி கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக 1100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1178 பேர் கைது செய்து இருப்பதாகவும் கூறி உள்ளது.