தெஹரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் 11வது நாளாக தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க, காவல்துறையினர் நடத்திய தாக்குதலில்  இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு ஏராளமான இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழமைவாதங்களை கைவிட்டு, தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற பலர் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி  ஈரான் தலைநகர் தெஹ்ரானில்  ஹிஜாப் முறையாக அணியாமல் சென்ற 22வயது இளம்பெண்ணை , அந்நாட்டு போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று  கைது செய்தனர்.

அந்த இளம்பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கியதால், கோமா நிலைக்கு சென்ற நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.  ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாப்பை அகற்றியும், தலைமுடியை வெட்டிக்கொண்டும் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக வருகின்றனர். அந்நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கொமேனிக்கு எதிராகவும் முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த 10நாட்களை கடந்தும் தீவிரமாகி வருகிறது. இதனால் ஆங்காங்கே, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்  வெடித்து வருகிறது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 75 பேரை காவல்துறையினர் துப்பக்கியால் சுட்டும், தாக்கியும் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய ஈரானிய மனித உரிமைகள் குழு,  குர்திஷ் பெண் மஹ்சா அமினி போலீஸ் காவலில் இறந்ததால் ஏற்பட்ட அமைதியின்மைக்கு எதிராக ஈரானிய அதிகாரிகளின் அடக்குமுறையில் 75 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக  தெரிவித்துள்ளது. ஆனால், ஈரானிய அதிகாரி களின்  41 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவித்துள்ளது.

இதனிடையே ஹிஜாப் போராட்டத்திற்கு இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.