டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் 60000 விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்திருக்க, நிலைமையை சமாளிக்க முடியாது என்று அரியானா மாநில காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. டெல்லி எல்லைகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளது.
கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் எல்லையில் குவிந்துள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரியானா மாநில போலீசார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, அம்மாநில காவல்துறை டிஜிபி மனோஜ் யாதவ் கூறியதாவது:
எல்லைகளை சீல் வைக்கும் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. பயணிகளின் சிரமத்தை தவிர்க்க எல்லைகள் சீலிடப்படவில்லை. டெல்லி அம்பாலா, டெல்லி ஹிசார் தேசிய நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
ஆகையால் டெல்லிக்குள் வர உள்ளவர்கள் கிராமங்கள் வழியாக இணைப்பு சாலைகளை பயன்டுத்தி வர வேண்டும் என்று கூறினார். இது குறித்து பேசிய மற்ற காவல்துறை அதிகாரிகள், டெல்லி எல்லையில் அதிகம் பேரை குவிக்க வேண்டாம் என்று விவசாய சங்க பிரதிநிதிகளை கேட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.