டெல்லி: தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் டெல்லி மசூதிகளில் மறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கடந்த மாதம் டெல்லியில் நிஜாமுதீன் நடந்த தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்களை கண்டுபிடிப்பதற்காக புலனாய்வுத் துறை சிறப்பு குழு மற்றும் டெல்லி காவல் குற்றப்பிரிவு களம் இறங்கியது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக இந்த வெளிநாட்டினர் நாட்டிலிருந்து வெளியேற முடியாததால் வெவ்வேறு இடங்களில் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்.
தலைநகர் டெல்லி முழுவதும் பல இடங்களில் டெல்லி போலீசார் நடத்திய சோதனைகளின் போது, இவர்கள் 16-17 இடங்களில் மறைந்திருப்பது கண்டறியப்பட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: இந்த வெளிநாட்டு விருந்தினர்கள் அனைவருக்கும் தப்லிகி உறுப்பினர்கள் உதவி உள்ளனர். அனைத்து மசூதிகள் மற்றும் மதரசாக்களுக்கும் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
அவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. யாரைக் கண்டறிந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றார்.