அகமதாபாத்:

குஜராத்தின் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் கொரோனா வைரஸ் நோயாளிகள், தங்கள் ரத்த பிளாஸ்மாவை மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க நன்கொடையாக அளித்துள்ளதாக சமூகத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு குஜராத் சுகாதார அதிகாரிகளை சோதனை அடிப்படையில் பிளாஸ்மா மாற்று சிகிச்சையைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருகும் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிளாஸ்மா மாற்று சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் பிளாஸ்மா, நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும். மற்ற நோயாளிகளுக்கு இதை செலுத்தும் போது, அவர்கள் தங்களுக்கு ஏற்படுள்ள நோய் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இது உதவும் என்றார்.

கடந்த வியாழக்கிழமை, வதோதராவில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்திலிருந்து 44 முஸ்லீம் நோயாளிகளுக்கு 2 நாட்களில், இரண்டு முறை சோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று சமூகத் தலைவர் ஜூபர் கோப்லானி தெரிவித்தார்.

மருத்துவர்கள் வழங்கிய தீவிர சிகிச்சை மற்றும் தரமான உணவு மூலம், இந்த 44 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் கோப்லானி தெரிவித்தார்.

அவர்களின் இரத்தத்தின் பிளாஸ்மா இப்போது கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் கொண்டுள்ளதால், அவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்யும்படி நாங்கள் அவர்களிடம் கேட்டு கொண்டோம் என்று தெரிவித்த கோப்லானி, எங்கள் கோரிக்கையை ஏற்று அவர்கள் 40 பேரும் பிளாஸ்மாவை தானம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்றார்.