ஹாங்காங்
ஹாங்காங் குற்றம் புரிந்தோர் ஒப்படைப்பு சடத்தை எதிர்த்து 20 லட்சம் மக்கள் போராடியதால் அந்நகர தலைமை நிர்வாகி கேரி லாம் செங் மன்னிப்பு கோரி உள்ளார்.
ஹாங்காங் பெண் தலைமை நிர்வாகி கேரி லாம் செங் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு புதிய சட்டத்திருத்த மசோதா ஒன்றை அறிவித்தார். அந்த மசோதாவின் படி ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் வேறு நாடுகளில் குற்றச செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அந்நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி தொடர்ந்து போராட்டம் நடந்தது.
கடந்த ஞாயிறு அன்று பாராளுமன்றத்தின் அருகே சுமார் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது மழை பெய்ததையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த சட்ட மசோதாவைஉடனடியாக ரத்து செய்து விட்டு ஹாங்காங் தலைமை நிர்வாகி பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.
போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தனர். அத்துடன் போராட்டம் செய்யும் பொதுமக்களை விரட்டி அடிக்க ரப்பர் குண்டுகளால் சுட்டனர். பொதுமக்களில் பலர் காயமடைந்தனர். ஆயினும், போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.
இதை ஒட்டி நேற்று சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அரசு அறிவித்தது. ஆயினும் காவல்துறையினரின் அத்துமீறலுக்கு பொறுய்ப்பு ஏற்று தலைமை நிர்வாகி கேரி லாம் செங் பதவி விலக வேண்டும் என சுமார் 20 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் நகரமே ஸ்தம்பித்தது.
நிலைமை கட்டுக்கு மீறியதால் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் செங் நடந்தவைகளுக்கு மன்னிப்பு கோரி உள்ளார். ஆயினும் அவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.