சென்னை, 

போதிய மாணவர்கள் இல்லாததால் தமிழகத்தில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலையில் உள்ளன.

தற்சமயம் அங்கு படித்துவரும் மாணவர்கள் படிப்பை தொடரும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்த பிறகே அந்தக் கல்லூரிகளை மூட தமிழக அரசு அனுமதி வழங்கும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் நிறையவே உள்ளன.  கடந்த சில வருடங்களாகவே பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கேள்விக்குறியானது. இதனால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு நிர்வாகச் செலவுக்குக் கூட பணமின்றி பல தனியார் கல்லூரிகள் முடங்கியிருக்கின்றன.

இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்திருக்கும் தகவல்படி , 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அவற்றிடமிருந்து விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் திடீரென்று கல்லூரிகளை மூடினால் அங்கு படித்துவரும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 77 ஆயிரத்து 61 பேர் படிக்க வேண்டிய பொறியியல் படிப்புகளில் ஒருலட்சத்து 34 ஆயிரத்து 994 பேர் மட்டுமே படித்ததாக தொழில் நுட்ப இயக்கத்தின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இதுமட்டுமல்ல, 2016-17 கல்வி ஆண்டில் 22 இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் ஒரு கட்டட பொறியியல் கல்லூரியிலும் ஒரு மாணவன்கூட விண்ணப்பிக்கவில்லை என உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்தப் போக்கால்  மதுரை, கோயமுத்தூர், சென்னை, திருச்சி ஆகிய பெருநகரங்களுக்கு வெளியே உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

அந்தக் கல்லூரிகளின் விலை குறைந்தபட்சம் ரூ.25 கோடியிலிருந்து அதிகபட்சம் ரூ.300கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆக பொறியியல் படிக்க மாணவர்களிடையே விருப்பம் குறைந்து வருவதால்தான் தனியார் கல்லூரிகள்  கதவுகளை மூட தயாராகி வருகின்றன.