பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்நாட்டில் மொத்த உணவு விற்பனை சந்தையுடன் தொடர்புடைய புதிய கொரோனா வைரஸ் தொற்று, மீண்டும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து, தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன.
அங்கு கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2வது அலை பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. காரணம் பெய்ஜிங்கில் இன்று மட்டும் புதியதாக 31 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். கிட்டத்தட்ட 30 குடியிருப்பு வளாகங்கள் தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. இது தவிர இன்று காலை மட்டும் 1,255 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் இருந்து முக்கிய விமான நிலையங்களுக்குச் செல்லும் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேலான அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைநகரில் தொற்றுநோய் பரவல் கடுமையாக உள்ளது என்று பெய்ஜிங் நகர செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெய்ஜிங்கிற்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்கும் ஜின்பாடி சந்தையில் மே.30 முதல் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக அங்குள்ள 8,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.