சென்னை:
தமிழகத்தின் மாநிலத் தலைநகரான சென்னையில், கடந்த 3 நாட்களில் மட்டும் முழு ஊரடங்கை மீறியதாக 10ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை (19ந்தேதி நள்ளிரவு) முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆதன்படி, மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பலர் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகின்றனர். அவர்களை மடக்கும் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன்ர்.
சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வும், தடை உத்தரவை மீறியதாக கடந்த 3 நாட்களில் 10,604 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 3 நாட்களில் 3517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை காவல்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள் என பல தரப்பினரும் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். ஏராளமான தடுப்புகள் அமைத்து, கடந்த 3 நாட்களாக சென்னை முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் விதிமீறல்கள் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துதான் வருகிறது.
சட்டத்தை மதிக்காத சென்னைவாசிகளின் நடத்தையால்தான் தற்போது, தலைநகரில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில், கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு நல்காமல், அரசின் சட்டத்திட்டங்களை மதிக்காமலும், கடைபிடிக்காமலும் மக்கள் வெளியே சுற்றி வருவதால், கொரோனா தொற்று பரவல் மேலும் தீவிரமாகி வருகிறது.
பொதுமக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை மதிக்காத சிலரின் நடத்தைகள் சாமானிய மக்களிடையே மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சட்டத்தை மீறி தேவையின்றி வெளியே வருபவர்களிடம் காவல்துறையினர் தயவு தாட்சண்யம் காட்டாமல், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இல்லையேல்… சென்னை மாநகரம் கொரோனா மாநகரமாக மாறிவிடும் என்பதை மறுப்பதிற்கில்லை…