டெல்லி: போலி இன்வாய்ஸ் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து இருக்கிறது.
நாடு முழுவதும் புதிய சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை மத்திய அரசு 2017ம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தியது. அரசுக்கு வருவாய் இருந்த போதிலும், ஜிஎஸ்டி நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. வரி மோசடிகளும் அதிகமாக உள்ளன.
இதையடுத்து, தொழில் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்துக்கான ஜிஎஸ்டி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிடம் இருந்து வசூலித்து விட்டு, அரசுக்கு வரி செலுத்தாமல் மோசடியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன.
இந்த நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு அவற்றின் பதிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 1,63,042 போலி பதிவுகள் கொண்ட நிறுவனங்கள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் 6 மாதங்களாக தங்களது ஜிஎஸ்டி 3B ரிட்டன்களை தாக்கல் செய்யாமல் ஏமாற்றி உள்ளன. இந்நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர நடப்பாண்டில் டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி 6 மாதங்களுக்கும் மேலாக ஜிஎஸ்டிஆர் 3Bயை 28,635 பேர் செலுத்தாமல் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடு முழுவதும் 4,586க்கும் மேற்பட்ட போலி ஜிஎஸ்டிஎன் நிறுவனங்கள் மீது 1,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.