அஸ்ஸாம் மாநில கிராமப்புறங்களில் வசிக்கும் அப்பாவி பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 31 பெண் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடத்திச் சென்றது அம்பலமாகியிருக்கிறது.
அஸ்ஸாமின் எல்லையோர மாவட்டங்கள், கோக்ரஜார், கோல்பாரா, துப்ரி, சிராங், பொங்கைகாம் ஆகியவை. பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் இந்த மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய பகுதிகள் ஆகும்.
கடந்த ஆண்டு (2015) ஜூன் மாதம் 11ம் தேதி, இந்த மாவட்டங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராஷ்டிரிய சேவா சமிதி பிரிவும், இன்னொரு இந்துத்துவ இணை அமைப்பான சேவா பாரதி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் வந்தனர்.
அப்பாவி பழங்குடி மக்களிடம், “நீங்கள் அனைவருமே வறுமையில் உழலுகிறீர்கள். உங்களது குழந்தைகளை எப்படி படிக்க வைப்பீர்கள். பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம். ஆகவே உங்களது குழந்தைகளை நாங்கள் குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்துச் சென்று நன்றாக படிக்க வைக்கிறோம்” என்று ஆசை காட்டினர்.
இதை நம்பிய பழங்குடி பகுதி மக்கள் 31 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் அனுப்பினர். இக் குழந்தைகள் மூன்று வயது முதல் 11 வயது வரையிலானவர்கள்.
குழந்தைகளை அனுப்பி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இதுவரையில், அக் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரியவில்லை. தவித்து நிற்கும் அவர்களிடம் ஆர். எஸ்.எஸ். அமைப்பு எந்தவித தகவல்கலையும் சொல்ல மறுக்கிறது.
இந்த இந்துத்துவ அமைப்புகளால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமிகளில் ஒருவர் பபிதா. இவரது தாய், “கடந்த வருடம், பருவமழை பெய்த நேரம். அப்போது இந்த பகுதிகளில் நண்டு நிறைய கிடைக்கும். பபிதாவுக்கு நண்டு மிகவும் பிடித்தமான ஒன்று. அவள் ஆசையுடன் கேட்டதால் சமைத்துக்கொடுத்தேன்.
அடுத்த இரண்டாவது நாள் ராஷ்டிரிய சேவா சமிதி பிரிவைச் சேர்ந்த சிலர் வந்து, “குழந்தைகளை படிக்க வைக்கிறோம்” என்று ஆசை காட்டி அழைத்துச் சென்றனர்.
இதோ, ஒரு வருடம் ஆகிவிட்டது. அஸ்ஸாமில் மீண்டும் பருவமழை துவங்கி, நண்டுகள் உலாவருகின்றன. ஆனால் பபிதா எங்கிருக்கிறாள் என்றே தெரியவில்லை. ஆர்.எஸ். எஸ். அமைப்பினரிடமிருந்தும் சரியான பதில் இல்லை!” என்று அழுகிறார் பபிதாவின் தாய்.
இந்த விவகாரம் குறித்து, புகழ் பெற்ற அவுட் லுக் பத்திரிகை விசாரணை மேற்கொண்டது.
“கல்வி தருவதாகச் சொல்லி அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்ல மறுக்கிறது. பல்வேறு அரசாணைகளையும் ஆர்.எஸ்.எஸ். உதாசீனப்படுத்தி வருகிறது.
” 31 பழங்குடி பெண் குழந்தைகளையும் திருப்பி அனுப்ப வேண்டும்” என்ற அசாம் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோக்ரஜார் பகுதியில் இயங்கும் குழந்தைகள் நல கமிட்டி, மாநில குழந்தை பாதுகாப்புச் சங்கம், தில்லியில் இயங்கும் சைல்ட்லைன் ஆகிய பல அமைப்புகளும் இதே போல ஆர். எஸ். எஸ்.ஸுக்கு உத்தரவிட்டுள்ளன.
ஆனால் அனைத்து உத்தரவுகளையும் அலட்சியப்படுத்திவிட்டு, இன்னும் மவுனம் சாதிக்கிறது ஆர்.எஸ். எஸ்.!
அந்த 31 குழந்தைகளின் பெற்றோருக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தேசத்தின் கேள்வி இதுதான்:
“கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்., எங்கே வைத்திருக்கிறது? வைத்திருக்கிறதா இல்லையா? இல்லை என்றால் ஏன்?”