டில்லி

நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் என கொரோனா தடுப்பு குழு தலைவர் வி கே பால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.  அது தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.  இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது எனக் கூறப்படுவதால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  நேற்று மத்திய அரசு கொரோனா தடுப்புக் குழு தலைவர் வி கே பால் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில், “டெல்டா வைரஸின் பாதிப்புகளை நாம் பார்த்தோம், தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம்.  அடுத்ததாக ஒமிக்ரான் அதிர்ச்சியைப் பார்த்து வருகிறோம்.  சென்ற 3 வாரங்களாக ஒமிக்ரான் பரவலின் கட்டங்களைப் பார்த்து வருகிறோம். ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வைரஸ் வளரும் சூழலில், நம்முடைய தடுப்பூசிகளின் செயல்திறன் செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே தடுப்பூசியில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்வது அவசியம் ஆகும்.  நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.  தற்போதுள்ள தளத்தைப் பயன்படுத்தி எவ்வளவு விரைவாகத் தடுப்பூசி உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். கொரோனா வைரஸின் இப்போதுள்ள உருமாற்றத்தை மையமாக வைத்து தடுப்பூசி தயாரிக்க வேண்டும்.

நாம் ஜெனரிக் தடுப்பூசியின் விரைவான வளர்ச்சியிலிருந்து நகர்ந்து, தடுப்பூசிகளைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய சூழலை உருவாக்கத் தயாராக இருக்க வேண்டும். இது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நடக்காது என்றாலும் ஒவ்வொரு ஆண்டும்கூட நடக்கலாம் என்பதை அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.