திருவனந்தபுரம்: கேரள அரசின் கஜானா கிட்டத்தட்ட காலியாகும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக்.
அவர் கூறியுள்ளதாவது, “மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.250 கோடி மட்டுமே அரசுக்கு வருமானம் வந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து, எங்களுக்கு ரூ.2000 கோடி வர வேண்டியுள்ளது.
ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மட்டும் ரூ.2,500 கோடி தேவைப்படுகிறது. இதனால், அரசின் கருவூலம் காலியாகும் சூழநிலை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.
முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு, அனைத்து அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கலாம் என்ற யோசனைக்கு, காங்கிரஸ் மற்றும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்யவே நாங்கள் கேட்டோம். எதிர்ப்பு காரணமாக, அரசு ஊழியர்கள் சம்பளத்தை நிவாரணமாக அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது.
இதனால், சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்த மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது 5 மாதம் நடைமுறையில் இருக்கும். இதுதான் மாநில அரசிற்கு உள்ள ஒரே வழி. முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு, அரசு தனது பங்களிப்பை செய்யும். பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படும்” என்றார் அவர்.