மும்பை
எங்களுக்கு புல்லட் ரெயிலை விட விவசாயிகள் நலனே முக்கியமானது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் தீபக் கேசர்கர் கூறி உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இணைந்து அகமதாபாத் மும்பை இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர். இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த ரெயில் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்கள் இடையிலான பயணத்தை மூன்று மணி நேரத்தில் கடக்க உள்ளதாகும்.
இதற்கான மொத்தச் செலவான ரூ.1.08 லட்சம் கோடியில் ஜப்பான் அரசு 81% நிதி உதவியும் மீதமுள்ளதை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகளும் அளிக்க உள்ளதாக அப்போது கூறப்பட்டது. இதற்காக பாஜக தலைமையிலான அப்போதைய மகாராஷ்டிர மாநில அரசு ரூ.5000 கோடி நிதியை அளிக்க ஒப்புக் கொண்டது. இதற்கான 150 கிமீ தூரமுள்ள பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்பணிகள் நடந்துக் கொண்டு உள்ளன.

தற்போது சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு அமைத்துள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் முந்தைய பாஜக சிவசேனா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவருமான தீபக் கேசர்கர் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் புல்லட் ரெயில் திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தீபக் கேசர்கர், “புல்லட் ரெயிலுக்கு அகமதாபாத் நகரில் இருந்து மும்பை செல்ல சுமார் ரூ.3500 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதை விட விமானத்தில் செல்லலாம். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஒரே மாநிலமாக இருந்து மும்பை தலைநகராக இருந்தால் இந்த திட்டம் தேவைப்படும். ஆனால் தற்போதுள்ள நிலையில் தேவைப்படாது. நாங்கள் எதையும் எதிர்க்கவில்லை.. ஆனால் எங்களுக்கு விவசாயிகள் நலன் முக்கியமாகும்.
எங்கள் கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் விவசாயிகள், மகளிர், இளைஞர், தொழிலாளிகள் ஆகியோர் நலனுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக ஜனநாயகத்தைக் கொல்ல நடந்த முயற்சியை வீழ்த்திய உச்சநீதிமன்றம் எங்களுக்கு சரியான நீதியை வழங்கி உள்ளது. நாங்கள் அந்த குறைந்தபட்ச செயல் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிப்போம். எங்களுக்குத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வழி காட்டுவார்.” எனப் பதில் அளித்துள்ளார்.
[youtube-feed feed=1]