சென்னை: அதிமுகவின் விமர்சனங்களை வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை என்றும், அண்ணாமலையை பார்த்து பயப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் எச்சரித்துள்ளார்.
அதிமுக பாஜக இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு கட்சி தொண்டர்களும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக மாற்று கட்சியினரின் உருவ பொம்மைகளை எரித்து வருகின்றனர். இதனால் மதுரை உள்பட சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், அதிமுகவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை யில், எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களைப் பார்த்து பயப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு கே. அண்ணாமலை ex.ஐபிஎஸ் அவர்கள் தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த உடன் மிகவும் பயந்தது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.
அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவ்வப்போது அவரை குறை சொல்லி பேசுவதும் விமர்சிப்பதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்களுக்கும் இன்றைய நிர்வாகிகளுக்கும் பொழுதுபோக்காக இருந்தது. பாஜக-அண்ணா திமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை ஒருபோதும் பாஜக பேசாத போதும், ஏதோ பாஜக அண்ணா திமுக தான் எங்களுக்கு வேண்டும் என்று அழுது அடம் பிடித்ததை போல இவர்களே கதவுகளை மூடி விட்டோம், ஜன்னல்களை மூடிவிட்டோம், நாங்கள் பிஜேபியை விட்டு ஓடி விட்டோம் என்று கதை அளந்து கொண்டிருந்தார்கள்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சாதனை படைத்த அண்ணாமலை அவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று அமைத்து தமிழகத்தில் ஒரு சாதனை படைத்து விட்டார். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 80 லட்சம் வாக்குகளும் பாஜகவிற்கு மட்டும் 50 லட்சம் வாக்குகளும் கிடைத்தது. ஏறத்தாழ 7300 பூத்துகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திமுகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார்கள் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்கள்.
பல்வேறு தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு டெபாசிட் பறிபோனதை நாம் பார்த்தோம். இவையெல்லாம் தமிழக பாஜக எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இவற்றையெல்லாம் உற்று நோக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை விமர்சிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஏதாவது ஒரு பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தவறான தகவலை முரண்பட்ட தகவலை அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய தகவலை தொடர்ந்து பேசி வந்தார்கள். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை.
இவ்வாறு கூறியுள்ளார்.