நாங்கள் எப்போதும் இந்தியாவையும், அதன் பிரச்சினைகள் குறித்தும்தான் பேசுகிறோம். ஆனால், பாரதீய ஜனதவோ, எப்போதும் பாகிஸ்தான் குறித்தே பேசுகிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி.
ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ள கருத்துகளின் தொகுப்பைக் காணலாம்.
கடந்த காலங்களில், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தியது உண்மைதான். ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக நிறுவனங்களும் பெரும் ஆபத்தில் இருக்கையில், வீட்டிற்குள் அமர்ந்திருப்பது பெரிய கோழைத்தனமான செயல் என்ற காரணத்திற்காகவே தற்போது களமிறங்கியுள்ளேன்.
உத்திரப் பிரதேசத்தில் அதிக வேலைகள் உள்ளதால் இங்கேயே நிறைய நேரமும் செலவாகிறது. கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் இப்போதுதான் தேர்தலும் ஆரம்பமாகியுள்ளது. அனைத்துக் கட்சிக்காரர்கள் மற்றும் நிர்வாகிகளும் நான் அவர்களின் தொகுதிக்கு வரவேண்டுமென விரும்புகின்றனர். எனவே, எனக்கு நேரம் கிடைக்கும்பட்சத்தில், பிற மாநிலங்களுக்கும் பிரச்சாரத்திற்கு செல்வேன்.
தீவிர அரசியிலில் மிகவும் தாமதமாக ஈடுபட்டுள்ளேன் என்பது உண்மைதான். காங்கிரஸ் பொதுச் செயலாளர் அல்லது உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் ஒன்றை ஏற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னைக் கேட்டபோது மறுத்தது உண்மைதான். ஆனால், அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது என்ற அடிப்படையில், எனது தவறை உணர்ந்து தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.
உத்திரப்பிரதேச வெற்றி வாய்ப்பு என்று பார்க்கையில், எங்களின் கட்சி பல தொகுதிகளில் வலுவாக உள்ளது. எங்களின் வேட்பாளர்கள் சிறந்தவர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் உற்சாகத்துடன் உழைக்கிறார்கள். எங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
எங்களின் வேட்பாளர்கள், சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணியின் வெற்றியை பாதித்து, பாரதீய ஜனதாவிற்குத்தான் உதவுவார்கள் என்பது தவறான வாதம். நாங்கள் அந்தக் கூட்டணியில் இணைந்து நின்றிருந்தால், பாரதீய ஜனதா 5 முதல் 10 இடங்களுக்குள்தான் வென்றிருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.
மாநில தலைமை, கட்சி நிர்வாகிகளுக்கு பதிலளிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, யார் எந்த முடிவை எடுத்தாலும், அதை நன்றாக சிந்தித்து எடுக்க வேண்டும். எங்களின் வேட்பாளர்கள் பாரதீய ஜனதாவின் வெற்றியை பாதிக்கும் வகையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக நிற்பேனா? என்ற கேள்விக்கு இப்போதைக்கு பதிலில்லை. நான் கட்சியின் பொதுச் செயலாளர். கட்சியைப் பலப்படுத்தவே நான் இதில் இணைந்தேனே ஒழிய, எனக்கு வேறு எந்த குறிப்பிட்ட பதவியின் மீதும் ஆசையில்லை.
தமிழ்நாடு, மராட்டியம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறதென்பது உண்மைதான். அங்கெல்லாம் கட்சியை வலுப்படுத்த வேண்டியுள்ளது.
விசுவாசமான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள கட்சிக்காரர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். இதன்மூலமே, அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவடையும்.
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ‘நியாய்’ திட்டம் இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழை மக்களுக்கு உத்தரவாதமான ஒரு வருவாய் இருந்தால்தானே, அவர்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வார்கள்.
இந்த நியாய் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நடுத்தர மக்களின் மேல் வரிச்சுமை ஏற்றப்படும் என்று பாரதீய ஜனதா பிரச்சாரம் செய்வது மிகப்பெரிய பொய். அப்படி எதுவும் நடக்காது. இதற்கான திட்டமிடுதல்களே வேறு.
கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கான நீதியளிக்கும் நிவாரணம்தான் இந்த நியாய் திட்டம்.
தேசியவாதம் என்பது நாட்டு மக்களிடையே அவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் விரும்பும் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதே. அதுதான் உண்மையான மற்றும் நாட்டிற்கு தேவையான தேசியவாதம். தற்போது பாரதீய ஜனதாக் கட்சி செய்துகொண்டிருப்பதற்கு பெயர் தேசியவாதமல்ல!
அவர்களின் தேசியவாதமென்பது, மோடியின் பெயரில் தொடங்கி, அந்தப் பெயரிலேயே முடிந்துவிடுவதாகும். எனவேதான், மோடியின் சேனை என்ற அவமானகரமான வார்த்தைகள் எல்லாம் வருகின்றன.
அவர்கள் எப்போதுமே பாகிஸ்தானைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் எப்போதுமே இந்தியாவைப் பற்றியும், அதன் பிரச்சினைகள் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
மக்கள் என்னை இந்திரா காந்தியுடன் ஒப்பிடுவதால் எனக்குப் பெருமையே! ஆனால், அத்தகைய ஒப்பீடு எனது பொறுப்புகளையும் அதிகரிக்கிறது என்று பலவாறாக பதிலளித்தார்.
– மதுரை மாயாண்டி