சென்னை:

மது எம் ஜி ஆர் நாளிதழில் பல வருடங்களாக பணியாற்றிய ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட ஊழியர்களை விவேக் மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக விளங்கியது நமது எம்.ஜி.ஆர். நாளிதழ். இந் நாளிதழும் ஜெயா டி.வியும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானவை.

அ.தி.மு.க. கட்சிப் பெயரும், சின்னமும் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அணியினருக்குச் சென்ற பிறகும் சசிகலாவின் குடும்பத்தினரே தொடர்ந்து ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். ஆகியவற்றை நிர்வகித்து வந்தனர். நமது எம்.ஜி.ஆர். நாளேட்டை கைப்பற்றப்போவதாக, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். அணியினர் பகிரங்கமாக அறிவித்தனர்.

அப்போது தினகரன், ஜெயா டி.வி. தலைமை செயலாளர் மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழை நிர்வகிக்கும் விவேக் ஆகியோர், “இரண்டு நிறுவனங்களும் சட்டப்படி எங்களுக்கு உரிமையானவை” என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் நமது எம்.ஜி.ஆர். அச்சகத்தில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்த முப்பத்தைந்து ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நிர்வாகத்துடன் பேச முயன்றனர். ஆனால் தற்போது நமது எம்.ஜி.ஆர். நாளேட்டை நிர்வகித்து வரும் விவேக், பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இந்த நிலையில், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய தயாரானார்கள். அதற்கான அறிவிப்பு தட்டிகளை நமது எம்.ஜி.ஆர். வளாகம் மற்றும் ஈக்காடுதாங்கள் பகுதியில் வைத்தனர்.

ஊழியர்கள் நம்மிடம், “ பல ஆண்டுகள் எங்களது உழைப்பை நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்துக்கு அளித்துள்ளோம். ஆனால் 35 ஊழியர்களை திடீரென வேலை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். கடந்த மாத சம்பளமும் எங்களுக்குத் தரவில்லை.   இது குறித்து நிர்வாகி விவேக்கிடம் பேச முயன்றோம். அவர் பேச்சுவார்த்தையை தவிரத்தே வந்தார்.

இந்த நிலையில் இன்று ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்ய தயாரானோம். அதற்கான அறிவிப்புகளை போஸ்டர்களாக ஒட்டினோம். தட்டிகளாக வைத்திருந்தோம்.

இதற்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தனது ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்துக்கு அழைத்தார் விவேக். அதை நம்பிச் சென்றோம். ஆனால் அங்கு விவேக் எங்களை கடுமையாக மிரட்டி விரட்டியடித்துவிட்டார். தற்போது செய்வதறியாது நிற்கிறோம்” என்று கதறியபடி பேசினர் ஊழியர்கள்.

மேலும், “அ.தி.மு.க. பிளவுபட்டாலும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் தங்களுக்கே சொந்தம் என்று டிடிவி தினகரன் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில், 35 ஊழியர்களை நிர்வாகி விவேக் நீக்கியிருக்கிறார். டிடிவி தினகரன்தான் இதில் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்! என்றனர்.

தற்போது  நமது எம்.ஜி.ஆர். நாளிதழை நிர்வகித்து வரும் விவேக்கின் கருத்தை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். அவரது எண் நாட் ரீச்சபிளில் இருந்தது.

விரைவில் அவரது தரப்பை அறிந்து வெளியிடுவோம்.