மும்பை

மும்பை ஹயாத் ஓட்டலில் தங்கள் கூட்டணி உறுப்பினர்கள் 162 பேரும் தங்கி உள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் டிவிட்டரில் பதிந்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயன்றது.   மூன்று கட்சிகளும் இணைந்து குறைந்த பட்ச பொதுத் திட்டம் தயாரித்தன.   சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென மகாராஷ்டிர மாநில ஆளுநர் பாஜகவின் தேவேந்திர பட்நாவிசை முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த அதிர்ச்சி முடிவடையும் முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தங்கள் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்காது என அறிவித்தார்.

அத்துடன் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.   இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை பாஜகவைப் பெரும்பான்மை வாக்கு கோரத் தேதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.   அதையொட்டி குதிரைப் பேரம் நடைபெறலாம் என்னும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் 162 உறுப்பினர்கள் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த தகவலை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தனது டிவிட்டரில்  பதிந்து சந்தேகம் உள்ளவர்கள் நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.