டெல்லி: பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாக ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அமோக வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் இருந்து வருகிறார். இந்த ஆட்சியை கவிழ்க்கும் வகையில், பாஜக, ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மியின் 10 எம்எல்ஏக்களை பாஜக அணுகியுள்ளதாகவும் ஆட்சியை உடைக்க முயல்வதாகவும் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரில், “எங்கள் 10 எம்எல்ஏக்களை பாஜக அணுகியதாக தெரிவித்துள்ளார். முன்னதாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவரும் நிதி அமைச்சருமான ஹர்பால் சிங் சீமா, பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக தனது 10 எம்எல்ஏக்களுக்கு தலா 20-25 கோடி ரூபாய் வழங்க முயற்சித்து வரவதாக குற்றம் சாட்டினார். அவர்களுக்கு பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை வழங்குவதாகக் கூறி அணுகியதாக சீமா கூறினார். மேலும், டெல்லியில் உள்ள பெரிய தலைவர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும், அவர்களுக்கு தலா 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக இதுவரை பதில் அளிக்கவில்லை.
117 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு 92 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 2 எம்எல்எக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்களம், மற்றவை 5 எம்எல்ஏக்களும் உள்ளனர்.