பெங்களூரு : கர்நாடகாவில் வசிக்கும் மற்ற மொழி பேசுபவர்கள், கன்னடம் பயில வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
ஆண்டுதோறும், கர்நாடகா தோன்றியதை நினைவுபடுத்தும் வகையில் நவ.1 ம் தேதி ராஜ்யோத்சவா விழா நடைபெறும். இந்த ஆண்டு, கர்நாடக அரசின் கல்வித்துறை சார்பில் கன்னட பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடியூரப்பா, தேசிய கொடியையும், கன்னட கொடியையும் ஏற்றி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
கன்னடம், அழகான மற்றும் வளமிக்க மொழி. நவீனத்தை உள்வாங்கி கொள்ளும் ஒரு உறுதியான மொழி. கன்னட மொழியை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவது அல்லது கூச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்திருப்போர், கன்னட மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறையை ஏற்று வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடத்தை மதிக்க வேண்டும்.
பிற மொழி மக்கள் கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் இனி கன்னடத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.
ராஜ்யோத்சவா விழாவானது, உடுப்பி, தும்கூர், மைசூரு, பெல்காவி, ராய்ச்சூர், கல்புர்கி, பிதர் ஆகிய பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது.