2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ‘ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற இந்திய ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.
திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யப்பட்டு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த ஆஸ்கர் விருது திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி மாதம் 24ம் தேதி நடைபெறுகிறது.
இதில் பல்வேறு பிரிவின் கீழ் திரைத்துறைக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் இந்திய-ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இயக்கிய ‘ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற இந்திய ஆவணப்படம் ஆஸ்கருக்கான குறு ஆவணப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படம் இந்தியாவின் ஊரகப் புறத்தில் வசிக்கும் பெண்கள் பலர் மாதவிடாய் காலங்களில் இன்னமும் துணிகளை மட்டுமே பயன்படுத்துவதையும், மாதவிடாய் என்றால் என்ன என்றே தெரியாத ஆண்களின் மனநிலையை விளக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நேப்கின்களை குறைந்த விலைகளை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுப்பிடித்து அதற்கான காப்புரிமையையும் பெற்றார். முருகானந்தத்தின் இந்த முயற்சி பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்த பெண்களுக்கு உதவும் விதமாக அமைந்தது.
முருகானந்தத்தின் கண்டுபிடிப்பை பல நிறுவனங்கள் வாங்க முன்வந்த போதும், அதனை அவர் விற்க மறுத்துவிட்டார். இவருடைய இந்த சேவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. மேலும் முருகானந்தத்தினால் தயாரிக்கப்பட்ட நேப்கின்களை பயன்படுத்துவதால் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் இயல்பாக இயங்க முடிகிறது.
முருகானந்தத்தின் இத்தகைய முயற்சியை கருப்பொருளாக வைத்தே ‘Period. End of Sentence’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.