திரையுலகின் கவுரமிக்க விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, பாடல் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நகரில் நடைபெறும் விழாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் ஆஸ்கர் விருது பெறுபவர் யாரென்ற எதிர்ப்பார்ப்பு இருப்பது போன்றே ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை யார் தொகுத்து வழங்குவது என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருப்பது வழக்கம்.
2016ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை இந்தியாவின் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவை பிரபல நடிகர் கொவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இடையில் ஓரின சேர்க்கையாளர் குறித்து அவர் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஆஸ்கர் விருதுகளை தொகுத்து வழங்கப் போவதில்லை என கெவின் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் 91வது ஆஸ்கர் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ஏபிசி என்ற நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர்கள் இன்றி இந்த வருடம் ஆஸ்கர் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.