வெற்றிமாறன் இயக்க, தனுஷ் தயாரிப்பில் உருவான விசாரணை திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சற்று இடைவெளிக்குப் பிறகு, தமிழ்த் திரைத்துறைக்கு கிடைத்திருக்கும் இந்த கவுரவம், அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், விசாரணை படத்தின் கதாசிரியர் சந்திரகுமாரிடம் பேசினோம்.
கோவை, பீளமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் சந்திரகுமார் தனது சொந்த அனுபவத்தில் எழுதியதுதான் லாக் அப் நாவல். இதைத்தான் விசாரணை என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.
ஏற்கெனவே வெனிஸ் திரைப்பட விருது, தேசிய விருது என பல விருதுகளைப் பெற்றிருக்கிறது விசாரணை. இந்த நிலையில்தான், மத்திய திரைப்படக் குழு, ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படத்தை பரிந்துரை செய்துள்ளது.
நாம் சந்திரகுமார தொடர்புகொண்டு பேசினோம்.
‘ ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் விசாரணை படத்துக்கு உண்டு. நிச்சயமாக ஆஸ்கர் வெல்வோம்’ என்று உற்சாகமாக பேச ஆரம்பித்தார் கதாசிரியர் சந்திரகுமார்.
அவர் நம்மிடம் பேசியதில் இருந்து..
“என் கதையை படமாக்குவதாக வெற்றிமாறன் சொன்னப்போ, “என் பெயரை டைட்டிலில் போடுவீங்களா”னு கேட்டேன். அதுக்கு அவர், “ உங்களை நான் ஒரு கோடி பேருக்கு அறிமுகம் செய்து வைப்பேன்’னு சொன்னார்.
அடுத்ததா, “ உலகம் முழுவதும் வாழும் நாடோடிக் குழந்தைகளின் விடுதலைக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்யணும்”னு வேண்டுகோள் வச்சேன்.
அதுக்கு அவர், “ தமிழ்நாட்டில் நம்ம படம் பேசப்பட்டாலே போதும். உலகம் முழுவதும் என்று போடுவது சரியா இருக்குமா?”னு கேட்டார்.
நான், “இது உலகம் முழுசுக்கும் பொருந்தக் கூடிய கதைக்களம். உலகம் முழுவதிலும் வாழும் ஏதிலிகளோட வலி அதில இருக்கு. அவங்களை அதிகாரத்தின் கரங்கள் ஒடுக்குது. அந்த அதிகாரத்திற்கு எதிரான முழக்கம் இந்தக் கதையில் இருக்கு”ன்னு சொன்னேன். அதை மகிழ்ச்சியோட வெற்றிமாறன் ஏத்துக்கிட்டார்.
இந்த ஒரு வருசத்தில ஏழு விருதுகளை விசாரணை படம் பெற்றிருக்கு. ஆனா, அதிகாரத்தின் மமதையை சொல்லுற இப்படியான கிரைப்படத்தை, மத்திய திரைப்படக்குழு ஆஸ்கருக்கு அனுப்பும்னு நாங்க நினைக்கவே இல்லை.
ஆனா எங்களோட எதிர்பார்ப்பை இந்திய தேர்வுக்குழு நிறைவு செய்திருக்கு. அவங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நிச்சயமா ஆஸ்கர் விருதை, விசாரணை படம் பெறும். அதுக்கு பல காரணங்கள் இருக்கு. இந்த இருபத்தோராவது நூற்றாண்டு மனித உரிமைகளுக்கான ஆண்டு. ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழணும். சமூகம் என்கிற கூட்டமைப்பில் தனிமனிதன் தொடர்ந்து நசுக்கப்படுகிறான். தனிமனிதனின் விடுதலையையும் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு பொதுச் சமூகம் உருவாக வேண்டும்’ என்பதுதான் உலகம் முழுசும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து.
ஆளும் வர்க்கம், இன்னமும் பழமையான பயங்கரவாத முறைகளான ராணுவ தாக்குதல், போலீஸ் தடியடி என்று அப்பாவி மக்களின் மீது தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருக்கின்றன. இதுக்கு இடையேதான் மானுட விடுதலையை நோக்கி நாம நகர்ந்துகிட்டிருக்கோம். லாக்-அப் கதையும் அதைத்தான் சொல்லுது.
விசாரணை படத்தோட காட்சிப்படுத்துதல், தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் எல்லாமே சிறப்பா இருக்கு.
போன (2015) வருசம், காப்ரியோ நடித்த ‘ரெவனென்ட்’ படம் ஆஸ்கர் விருதை வென்றது. இருநூறு வருடங்களுக்கு முன்னாடியான காலகட்டத்தில் தனிமனிதனின் போராட்டத்தை சொல்லும் படம் அது. அதற்கு முந்தைய வருசம், ’12 இயர்ஸ் ய ஸ்லேவ்’ படம் ஆஸ்கர் விருது பெற்றது. ஒரு மனிதன் 12 வருடங்களா அடிமைப்படுதப்பட்டு கிடக்கிறான். அந்த அடிமைத்தனத்தில இருந்து விடுதலையை நோக்கி நகர்வதும், அதுக்கான தேவையையும் சொன்ன படம் அது.
2013-ம் ஆண்டில் ஆஸ்கரை வென்ற ஆஸ்திரேலிய படமும், 1895-ம் ஆண்டு நடந்த போயர் யுத்தத்தை அடிப்படையா வைத்து எடுக்கப்பட்ட படம்தான். அந்தப் படத்தில், பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றுகிற ஒரு வீரன், கமாண்டர் ஒருத்தர் மீது வழக்கு தொடுப்பான். போயர் இனத்தவர் மீது அந்த கமாண்டர் நடத்திய அத்துமீறல்களை ஆதாரத்தோடு முன்வைப்பான். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
பிரிட்டிஷ் ராணுவம் பெற்றி பெறுவதற்காகத்தான் போயர்களை அடக்குகிறது. ராணுவத்தின் உத்தரவுகளைத்தான் அந்த கமாண்டர் செய்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏத்துக்கிட்ட அந்த கமாண்டர், “பிரிட்டிஷ் அரசுக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு.. நீங்க என்ன செய்யச் சொன்னதைத்தான் நான் செஞ்சேன். என்னை தூக்கில போட வேண்டாம். சுட்டுக் கொல்லுங்க”னு சொல்லுவார். அப்படியே தண்டனை நிறைவேற்றுவாங்க.
இப்போ, (2016-ம் ஆண்டு) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைத்திருக்கிற விசாரணை படமும் அப்படித்தான். கேட்பார் இல்லாத எளிய மக்களை, அதிகார வர்க்கம் – இந்த அமைப்பு எப்படி நசுக்குகிறது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறது. உண்மை முகத்தை உலகுக்கு உரத்துச் சொல்கிறது.
இதனால்தான் இத்தாலியில் மமனித உரிமைப் பிரிவில் விருது கிடைத்தது.
நிச்சயமாக இந்த படம் ஆஸ்கார் விருதை வெல்லும்” நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாக சொல்லி முடித்தார் சந்திரகுமார்.
நம்பிக்கை நிறைவேறட்டும்.. மகிழ்ச்சி பெருகட்டும்!