பத்திரிகையாளர் சுகுணா திவாகர் (Suguna Diwakar)அவர்களின் முகநூல் பதிவு..

“விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு தலைவராயிருந்த தமிழினி எழுதிய ‘கூர்வாளின் நிழலில்’ படித்து முடித்தேன். புலிகள் இயக்கத்தின் கட்டாய ஆள்சேர்ப்பு, தலைமை வழிபாடு, ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் அற்ற தன்மை, போராட்டத்தை லட்சியமாய்க் கொண்டு தொடங்கிய இயக்கம் எப்படி மக்கள்மீது அதிகாரம் செலுத்தி வெறுப்பைச் சம்பாதித்தது, கிழக்கு மாகாணத்தில் களையெடுப்பின் பேரால் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள், இறுதிக்காலத்தில் புலிகளின் மனித உரிமை மீறல்கள் எனப் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்த விமர்சனங்கள் பல ஆண்டுகாலமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இறுதிப்போருக்குப் பின் புலிகள் அமைப்போடு ஏதேனுமொருவகையில் தொடர்பில் இருந்தவர்கள் இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். மேற்கண்ட விமர்சனங்களைத் தாண்டி புத்தகத்தின் முக்கிய அம்சம், புலிகள் அமைப்பின்மீது கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்கு அப்பால் இறுதி ஆறு ஆண்டுகளில் புலிகளின் ராணுவம் பலவீனமாக இருந்தது என்பதைத் தமிழினி விரிவாக விவரிப்பது. ஒருபுறம் ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்ற மூத்த தலைவர்களை இழந்தநிலையில் கட்டாய ஆள்சேர்ப்பு, அனுபவமற்ற போராளிகள், ஆள்பலம் குறைந்தது ஆகியவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
எல்லாம் சரிதான். ஆனால் புத்தகத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இலங்கை அரசு, இலங்கை ராணுவம் குறித்த மென்போக்கு தொடர்கிறது. கிழக்கு மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட சுனாமி நிவாரணப் பணிகள் தொடங்கி, புனர்வாழ்வு நிலையம் வரை ராணுவம் என்பது மக்கள் மீட்பு நிறுவனமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சமாதான காலம் தொடங்கி இறுதிப்போர் காலம் வரையும் புலிகள் மட்டுமே போரை விரும்பியவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இறுதிப்போர்க் காலகட்டத்தில் புலிகளின் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர, மருந்துக்கும் ராணுவத்தின் போர்க்குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை.
குறைந்தபட்சம் நடேசன், இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் குறித்தாவது தமிழினி பதிவு செய்திருக்கலாம். நடேசன் குறித்த பதிவுகளும் போரின் கடைசிக் கட்டத்தில் இசைப்பிரியாவின் கணவரைச் சந்தித்த பதிவும் நூலில் உள்ளன. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட அவல முடிவு கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தமிழினி புத்தகம் எழுதிய காலகட்டத்தில் இலங்கை அரசின்கீழ் வாழவேண்டிய நிர்ப்பந்தம், சுயப்பாதுகாப்பு குறித்த அச்சம் காரணங்களாகக்கூட இருக்கலாம்.
புலிகள்மீதான விமர்சனம் என்பது தேவைதான். ஆனால் இலங்கை அரசு குறித்தும் ராணுவம் குறித்தும் விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு புலிகளைமட்டும் குற்றம் சாட்டுவது என்பது நிச்சயமாக ஜனநாயகத்திலோ நீதியிலோ சேராது. இந்தப் புத்தகத்தை இலங்கை அரசு ஆதரவுப் பிரதி என்று சொல்லமுடியுமா என்று தயக்கம் இருந்தாலும் அப்படிச் சொல்வதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன.”

Patrikai.com official YouTube Channel