டில்லி:

13 பேரை துப்பாக்கி சூட்டுக்கு  பலிவாங்கி உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி உள்ளார்.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில், மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் ஏதும் பின்பற்றப்பட வில்லை என்றும் இந்த ஆலையால் சுவாசக் கோளாறு, கேன்சர் பாதிப்பு, கிட்னி பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசுப்பட்டு, உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

இதை எதிர்த்து போராடி வந்த மக்கள் போராட்டத்தின் 100-வது நாளான  கடந்த 22 ஆம் தேதி அன்று அப்பகுதிகள் மக்களுடன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  ஏராளமான பொதுகமக்களும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அன்று  பொதுமக்கள்மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் வரை உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். கனடாவில் உள்ள  வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் வீடு முன்பும் போராட்டம் நடைபெற்றது.

இவ்வளவு களேபரம் நடைபெற்று முடிந்தபிறகு,  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: ‘ஆலையின் அனுமதியை முந்தயை அரசு கொடுத்தது என்றும், மக்கள் போராட்டத்தில்  13 பேர் உயிரிழந்தது கவலை அளிக்கிறது’ என்றும் தெரிவித்து உள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வருத்தம் தெரிவிக்காவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.