சென்னை:
தமிழைவிட சமஸ்கிருதமே மூத்தது என்று பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேசியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், சில பாடங்கள், படங்கள் குறித்து தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு வெளியான 12-ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் கி.மு 300 ஆண்டுகள் பழமை யான மொழி தமிழ் என்றும், கி.மு 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் வெளியாகியுள்ள இந்தப் பாடப்பிரிவு நீக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, பாடப்புத்தகத்தை தயாரித்த 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் உத்தர விட்டிருந்தார். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இடம்பெற்றுள்ள தமிழை விட சமஸ் கிருதமே மூத்த மொழி என்ற சர்ச்சைக்குரிய பகுதியை நீக்க மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனமும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் தவறாக குறிப்பிடப்பட்டும், பாரதியார் காவி தலைப் பாகை அணிந்திருப்பது போல் படம் இடம்பெற்றும் சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.