சென்னை: திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த  இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுலை 1) தொடங்கி வைத்தார்.

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை திமுக சார்பில் தொடங்கி வைத்துள்ளேன். இன்று முதல் 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறுகிறது. நாளை ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ஜூலை 3 முதல் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது, தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது என தெரிவித்தார்.

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற  திட்டத்தின்கீழ்  தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொள்ளும் போது திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும், திமுக நடத்தியுள்ள உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி ஒவ்வொரு வாக்காளரையும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று பிரச்சார இயக்கத்தில் இணைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மகளிர் தங்களின் உரிமைத் தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளது.