சென்னை:  தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், ராமநாதபுரம் உள்பட  கடற்கரை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 12-20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நவ.28, 29 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு வேளைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய வளிமண்டல காற்றழுத்த தாழ்வு இன்று முதல் தீவிரமாகும் என்றும், அது வளிமண்டல காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மேலும், நவம்பர் 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று  தஞ்சை, நாகை உள்பட 7 டெல்டா மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தான் காலை 12 மணிக்குள் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும்,  இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்ற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை,கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாக உள்ளதால் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விசைப்படகுகளை ஒன்றுக்கொன்று இடைவெளிவிட்டு நங்கூரமிட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்த அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.