சென்னை: சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமென்ட்ஸ் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கைகுலுக்கி தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டார்.  தனி சந்திப்பு நடைபெறவில்லை. ஆனால், உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகர மாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக ஓபிஎஸ் செய்தியாளர்களிடம்  கூறினார்.

இந்தியா சிமென்ட்ஸ் விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.  விமான நிலையத்தில் அவரை, மத்தியஅமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.

அதைத்தொடர்ந்து இன்று  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது, தமிழ்நாட்டில், மருத்துவம், பொறியியல் படிப்பு தமிழ்மீடியத்தில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து, பிற்பகல், 02.25 மணி அளவில்  தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்றார்.

முன்னதாக, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்துபேசினார். அதிமுகவில் ஒபிஎஸ், இபிஎஸ் ஆளுக்கொரு பக்கம் இழுத்துக்கொண்டு செல்லும் நிலையில், பிரிந்த அதிமுகவை ஒன்றிணைத்து, தனது லட்சியத்தை அடைய பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படியே நேற்றைய பிரதமர் நிகழ்வுகளும் அரங்கேறியது. பிரதமரை வரவேற்க வந்தபோது, இருவரும் தனித்தனியாக வந்த நிலையில், வழியனுப்பும்போது இருவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்தார்  மோடி. இது அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துவதற்கானது என்று கூறப்பட்டது. ஆனால் இருவரிடமும் அமித்ஷா எதுவும் பேசவில்லை.

இநத் நிலையில், இன்று சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ஒபிஎஸ், இபிஎஸ் சந்திக்க முயற்சி செய்ததாக தகவல்கள் பரவின. ஆனால்,  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இந்த விழாவில், ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். விழா நிறைவடைந்ததும்,  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

அமித்ஷாவை ஒபிஎஸ் தனிப்பட்ட முறையில் சந்திக்க முயற்சித்த நிலையில், அது நடைபெறவில்லை. இது ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமாகவே இருந்தது. இருந்தாலும்  நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக வெறுமனே இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபின்னர் அமித் ஷா, பா.ஜ.க. அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய ஓபிஎஸ், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக கூறினார்.