உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாழ்த்து தெரிவித்தார்.
பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ” நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்” என பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் கூடிய அவரது ரசிகர்கள் முன் தோன்றி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறினார்.
இந்த நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இன்று மாலை ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்த திடீர் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “புத்தாண்டை ஒட்டி ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பது அரசின் கடமை” என்றார்.