காஞ்சிபுரம்: தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சசிகலா விவகாரத்தில் தொண்டர்களின் எண்ணத்தை ஓபிஎஸ்-இபிஎஸ் நிறைவேற்றுவார்கள் என்றும், திமுகவை விட டிடிவி.தினகரனால்தான் கட்சிக்கும், ஆட்சிக்கும் அதிக தொல்லை’ என கூறினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை காஞ்சிபுரம் வருகை தந்தார். அங்குள்ள சங்கரமடத்தில், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இருவரும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தனி அறையில் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்றதுன், காமாட்சியம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “திமுகவை விட அதிமுகவையும், ஆட்சியையும் ஒழித்துவிட வேண்டும் என அதிகம் எண்ணியவர் டிடிவி.தினகரன்தான் , அதிமுகவையும், ஆட்சியையும் ஒழிக்க அதிகம் தொல்லை கொடுத்தார் . அவரை தடுக்க தவறிய சசிகலா, அவர் கட்சி ஆரம்பித்து கட்சிக் கொடியையும், சின்னத்தையும் வேட்பாளர்களையும் அறிவித்த போது ஆசி வழங்கிவிட்டு, இப்போது வந்து அதிமுகவுக்கு சசிகலா உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், அவரை அதிமுகவில் இணைக்கும் விவகாரத்தில் தொண்டர்களின் எண்ணம், விருப்பம் எதுவோ அதைத் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் செய்வார்கள் என்று நாசூக்காக பதில் தெரிவித்தவர், வரும் தேர்தலில் மூன்றாவது முறையும் எங்களைத்தான் மக்கள் அரியணையில் ஏற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
சசிகலாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஏற்கனவே கூறும்போது, சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமைதான் முடிவு செய்யும் தெரிவித்து இருந்தார். சசிகலாவுக்கு ஆதரவாக இவர் கூறும் கருத்துக்கள் கட்சியில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவிசண்முகம் உள்பட பலர் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என தடாலடியாக கூறி வரும் நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தொண்டர்கள் விரும்பினால், அதிமுகவில் சசிகலா சேர்த்துக்கொள்ளப்படுவார் என தெரிவித்துள்ளது, அதிமுவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.