சென்னை:
மிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில் அதிமுகவும் தேர்தல் வியூகத்தை வகுக்கத் தயாராகி வருகிறது. இன்று மாலை அமைச்சர்கள், அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வர இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுக தேர்தலில் வெற்றிபெற முனைப்புக் காட்டி வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோரும் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். திமுகவிலும், அதிமுகவிலும் அதிரடியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆட்சியை 3-வது முறையாகத் தொடரும் முனைப்பில் அதிமுகவும், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் திமுகவும் கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றன.

மக்களைவைத் தேர்தல் படுதோல்விக்குப் பின்னர், அதிமுகவுக்குள் இருந்த ஓபிஎஸ், இபிஎஸ் மோதலுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக தேர்தல் பணியைத் தொடங்க இன்று முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதாக அதிமுக வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் விரிசல் இல்லாத நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இதுவரை அக்கூட்டணியில் தொடர்வதாக உறுதிப்படுத்தவில்லை. தேமுதிகவும் அதேபோன்று தனது நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ளது. கூட்டணியில் இருந்த பாஜக இதுவரை தனது நிலைப்பாட்டை மாற்றி மாற்றிப் பேசி வருகிறது. கூட்டணியில் இழுபறியைக் கிளப்பி அதிக இடங்களைக் கேட்டுப் பெற பாஜக முயல்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். அப்போது அவர் அவரது கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இடையில் நாளை இரவு அதிமுக சார்பில் அவரைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. அப்போது கூட்டணி குறித்த தமிழக பாஜக-அதிமுக இடையேயான மாறுபட்ட கருத்துகள் தீர்க்கப்படும் எனத் தெரிகிறது.

அதிமுக கூட்டணியை இறுதிப்படுத்தும் விதத்தில் அமித் ஷாவின் சென்னை வருகை இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், இன்று மாலையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக உள்ள பிரச்சினைகள், தமிழகம் முழுவதும் கட்சியைத் தேர்தலுக்குத் தயார்படுத்துவது, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை, பலமான தொகுதிகளைக் கண்டறிவது, தமிழகத்தில் உள்ள தலையாயப் பிரச்சினைகளைக் கையாளுவது உள்ளிட்டவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.