சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், தன்னை விமர்சித்த நீதிபதியை வழக்கில் இருந்து மாற்றக்கோரி நேற்று மாலை குரல் கொடுத்து, மனுத்தாக்கல் செய்து வந்த, ஓபிஎஸ், இன்று தடாலடியாக மன்னிப்பு கோரினார். ஓபிஎஸ்-ன் இந்த நடவடிக்கை, அவர்மீதான நம்பகத்தன்மையை மேலும் கேலிக்குரியதாக்கி உள்ளது.

 அதிமுக பொதுக் குழு  தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் நடவடிக்கையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் விசாரணைக்கு வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், வழக்கின் விசாரணை நீதிபதியை மாற்ற வேண்டும் என ஊடகங்களில் கூறி வந்ததுடன், தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து நேற்று  இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று  (ஆக.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஆக.5) தள்ளி வைக்க வேண்டும் என வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தாா். அதே நேரம் வழக்கை திங்கள்கிழமைக்கு (ஆக.8) தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘இந்த வழக்கின் நீதிபதியை மாற்றுவது குறித்து தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுதொடா்பாக இன்னும் முடிவெடுக்காத நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்க கூடாது’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீா்செல்வத்தின் நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், களங்கப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தீா்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் அல்லது திருத்தம் இருந்தால் தன்னிடமே முறையீடு செய்யலாம் என்று கடுமையாக கூறினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தரப்பு, இன்று தலைமை நீதிபதியிடம், தனது வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரிக்கலாம் என்று மன்னிப்பு கோரியுள்ளது.

ஓபிஎஸ்-ன் இந்த நடவடிக்கை, அவரது தைரியம் மற்றும் நம்பக்கத்தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்-ன் சரண்டர், சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனே சசிகலா, டிடிவிக்கு  எதிராக குரல் கொடுத்த ஒபிஎஸ் பின்னர் அவரிடம் சரணாகதி அடைந்ததும்,  ஆட்சி அதிகாரத்துக்காக எடப்பாடியிடம் மண்டியிட்டதும் போல தற்போது நீதிபதியிடம் மண்டியிட்டு உள்ளர் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.