ஓபிஎஸ் ஆலோசனை இன்றும் தொடர்கிறது……! முடிவு எடுப்பாரா?

சென்னை,

பிஎஸ்சின் பெரும்பாலான கோரிக்கைகளை எடப்பாடி அணி நிறைவேற்றி உள்ளதால், இரு அணிகளும் நேற்று இணையும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

இதற்காக ஜெயலலிதா சமாதியும் அலங்கரிக்கப்பட்டது. கட்சி தொண்டர்களும் ஜெயலலிதா சமாதி மற்றும், கட்சி அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடத் தொடங்கினார்.

இரவு 10 மணி ஆகியும் ஓபிஎஸ்-ன் ஆலோசனை முடிவடையாததாலும், மழை காரணமாகவும் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சுமார் 6 மணி நேரத்திற்கும் மேர் ஓபிஎஸ் தனது அணியினருடன் நடத்திய ஆலோசனையில் எந்தவித முடிவு எடுக்க முடியாமல் திணறியதால், அதிமுக இணையும் என்று நினைத்திருந்த அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்றும் ஓபிஎஸ்-ன் வீட்டில் மீண்டும் ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  ஓ பன்னீர் செல்வம் இல்லத்திற்கு எம்பிக்கள் மைத்ரேயன், சுந்தரம், தேனி பார்த்திபன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரும், இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர் என்று கூறப்படுபவரான, கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையாக இல்லை. ஓ.பி.எஸ்., தலைமையில் தமிழகம் முழுதும் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள்.  தொண்டர்கள், நிர்வாகிகள் பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கிறேன்.

ஓ.பி.எஸ்., எடுக்கும் இறுதி முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.

முன்னதாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முனுசாமி,   தர்மயுத்தத்தின் மூலக்கருவை நிறைவேற்றவில்லை என்றால் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை. தர்மயுத்தத்தின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தை முழுமையாக வெளியேற்றுவது தான். அவர்களை வெளியேற்றாத வரை அணிகள் இணைய சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓபிஎஸ்-ன் காலதாமதம் அதிமுக உறுப்பினர்களிடையே அவர்மீது அதிருப்தியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது இரு அணிகளும் இணைய சரியான சந்தர்ப்பம் இருந்தும் அதை பயன்படுத்த ஓபிஎஸ் தயங்குவது குறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
English Summary
OPS consultation continues today ... to decide?