சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே போட்டியிடுவார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார் என்று பழனிசாமியிடம் கூறினோம். எங்கள் வேண்டுகோளை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தென்னரசுவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் தந்த ஒப்புதல் படிவத்தில் வேட்பாளர் தென்னரசு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து,  பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.  இதில், வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு வாபஸ் பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், அவர் வாபஸ் பெறுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.