டெல்லி; ஓபிஎஸ் செயல்பாடு கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,   சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வின் உத்தரவு கட்சியின் உள்விவகாரங்களிலும்,கட்சியின் ஜனநாயக அமைப்பு முறையிலும் தலையிடும் செயல் குறிப்பாக கட்சி விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது மேலும் கட்சிதலைமை குறித்து விவாதிக்கக்கூடாது என்பது எதிர்மனுதாரருக்கு ஒரு தனிப்பட்ட “வீட்டோ” அதிகாரத்தை வழங்குவதுபோல் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. முன்னதாக, ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செயற்குழு ஒப்புதல் வழங்கிய தீர்மானங்களை தவிர வேறு ஏதும் செய்யக்கூடாது என உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கட்சியின் விதிக்கு முரணாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 11ந்தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், கட்சியின் பைலா திருத்தம் செய்யப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு எதிராக,  ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதற்கிடையில்,  அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் அணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. சுமார்378 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில், ஓபிஎஸ் மீது சரமாரியாக குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. மனுவில்,

கட்சியின் பொருளாளராக இருக்கும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது.  கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும், அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்குட்பட்டது.

அதிமுகவின் ஜனநாயக அமைப்பு முறையில் தலையிடுவது போல் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளது. எதிர்மனுதாரருக்கு வீட்டோ அதிகாரம் தருவது போல் கட்சி தலைமை பற்றி விவாதிக்கக்கூடாது என்ற ஆணை உள்ளது.

உயர்நீதிமன்ற திபதிகளின் உத்தரவை செயல்படுத்தினால் கட்சியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது. எனவே பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றத் திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.